Shangri - La

Anything under the sun - in Thamizh!

Friday, February 20, 2004

உப பாண்டவம் (Upa Paandavam)

"...துரியோதனன்...துரியன்..."

ஓசைகள் அற்ற இடம். தண்ணீரின் இருப்பே தெரியவில்லை. மெல்லக் காற்றில் ஏதோ அலையும் ஓசை. எங்கிருந்தோ வரும் நாணல் காற்றில் உரசும் சப்தம். அவன் அந்த சப்தத்தைக் கேட்டவுடன் தன் கைகளைக் கூப்பி வணங்கிக் கொண்டான்.

"அஸ்வத்தாமா."

நாங்கள் அந்த இடத்தின் மர்மச் சுழிப்பினின்று விலகி இருளில் நடந்த பிறகு அவன் மிகத் தணிவான குரலில் சொன்னான்."துரியோதனன் இருக்கிற இடத்துல எப்பவும் அஸ்வத்தாமா இருப்பாரு."


(c) omcentrum.cz

...பிறகு சொன்னான்.

"ஆடு மேய்க்கிற மையன்களுக்கும் பெண்டுகளுக்கும் தெரியும். நானே கண்டிருக்கேன். உச்சி வெயில்ல தலைய மட்டும் தண்ணி மேலே காட்டிகிட்டுத் துரியோதனன் இருப்பான்...யுத்தத்தில பட்ட ரணம் ஆறாத வேதனையில் அவன் விடுற மூச்சு சப்தம் வெட்ட வெளியைச் சிதறடிக்கும்."


இப்பொழுது காற்று தனிப்பாதையில் எதையோ தேடுவது போல் சுழற்றிக் கொண்டு சென்றது, குடுகுடுப்பைக்காரன் தன் கைகளைக் காட்டிச் சொன்னான்.

"எங்க துரியோதனன் படுகளம் நடந்தாலும் அஸ்வத்தாமா வந்துருவார். இப்ப அவரும் நம்ம கூடத்தான் வர்றாரு...வேணும்னா பாருங்க, பொழுது விடிய திரும்பி நடந்து வரும் போது யாரோ விசும்புற சப்தம் கேட்கும். காட்டுறேன்...
அமானுஷ்யம் நிறைந்த இப்படியொரு ஆரம்பத்தைப் படித்தவுடன், வேறு எதிலும் என்னால் கவனம் செலுத்த முடியவில்லை. :-)அப்படி ஆரம்பித்ததுதான் எஸ்.இராமகிருஷ்ணனின் 'உப பாண்டவம்'.

என்ன எதிர்பார்த்து இந்தப் புத்தகத்தை நான் படிக்க ஆரம்பித்தேன் என்று தெரியவில்லை. மஹா பாரதக் கதையா? அதில் வரும் கதாபத்திரங்களைப் பற்றிய ஆய்வா? என்ன?

ஆனால், என் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டதாக அது இருந்தது என்பது மிகவும் உண்மை.

சில கதாபாத்திரங்களையும் கதைகளையும், எத்தனை முறை, எத்தனை விதவிதமாகப் படித்தாலும் கேட்டாலும் அலுக்காது. ஒவ்வொரு முறை அவற்றைப் பற்றிக் கேட்கும்/படிக்கும் போதும், புதிது புதிதாகக் கற்பனைகள் தோன்றும். அதுவரையில் அந்தந்தக் கதாபாத்திரங்களிலோ/கதைகளிலோ அகப்படாத புதிய கோணங்கள் கிடைக்கும். மஹாபாரதமும், இராமாயணமும் அப்படித்தான். எத்தனை முறை ஆராய்ந்தாலும் அலுப்புத் தட்டாது.

'உப பாண்டவத்தில்' நான் படித்த, இதுவரை நான் கேள்விப்படாத ஒரு விஷயம்: துரியோதனனிடம், கிராம மக்களுக்கு இருக்கும் அளவு கடந்த பக்தி. இது எப்படி சத்தியம்? வில்லனாகவே மட்டும்தான் துரியன் எனக்கு அறிமுகம் (அப்பொழுதே, அவ்வளவு கொடியவன் எப்படி கர்ணனிடம் அவ்வளவு அன்பு பாராட்டினான் என்பது பற்றி யோசித்திருக்கிறேன். என்னதான் 'அரசியல் காரணம்', 'கர்ணனின் வில் திறன்' என்று சொல்லிக்கொண்டாலும், துரியன் அப்படி ஒன்றும் கடைந்தெடுத்த அயோக்கியனாக இருக்க முடியாது என்று எனக்குத் தோன்ற ஆரம்பித்திருந்தது.). இப்பொழுது, துரியனின் வேறு பரிமாணங்களும் எனக்கு அறிமுகமாயின. யாராலும் ஜெயிக்க முடியாதவன்.அநியாயமாகக் கொல்லப்பட்டவன் (இதுவும் முன்னமே தெரியும். இருந்தாலும், 'வில்லனை எப்படிக் கொன்றால் என்ன?' என்ற மிதப்பு தான் மேலோங்கியிருந்தது.) ஆளற்ற குளங்களில் மூழ்கி இருப்பவன் (இது நிச்சயம் புதுசு).

அப்புறம் எத்தனையோ மஹாபாரதச் சம்பவங்கள் - திரௌபதியின் திருமணம், பாண்டவர்களின் மனநிலை, சிகண்டியின் ஆத்திரம்...எல்லாமே வேறு விதமாக, வேறு பார்வையில். இதுவரை நான் காணாத விதத்தில். சில சமயம் நான் ஊகித்து வைத்திருந்த விதத்திலும்.

அடிப்படையில், இதுவும் ஒரு வகையான 'retelling' மாதிரிதான் தோன்றுகிறது. தெரிந்த சம்பவங்களையும் ஆட்களையும் வைத்து, நம் பார்வையில் அவற்றை விளக்குவது. சொல்வது சுலபம். செய்வது மிகவும் கடினம். ஏற்கனவே பலர் முயற்சி செய்து பார்த்த விஷயத்தில் கை வைக்க தைரியம் வேண்டும்.

எஸ்.இராவின் எழுத்து எனக்கு விகடனில் தொடராக வரும் 'துணையெழுத்து' மூலம்தான் அறிமுகம். 'துணையெழுத்தில்' அவரது நடை ஒரு மாதிரி இருக்கிறது. 'உப பாண்டவ'த்தில் வேறு மாதிரி இருக்கிறது. தொடருக்கும், நூல் வடிவத்திற்கும் எழுத்து மாறுபடுமா என்ன? நூல் வடிவமாக இருந்தால் 'கொஞ்சம் கஷ்டமான, புரிபடாத எழுத்தை பயன்படுத்தலாம், தொடர் என்றால் கொஞ்சம் சுளுவாக இருக்க வேண்டும்' என்று ஏதாவது விதி இருக்கிறதா??

அது எப்படியோ. 'உப பாண்டவம்' எக்ஸ்ப்ரெஸ் வேகத்தில் நகர்கிறது என்பது மட்டும் உண்மை. Ashok Bankerஇன் 'இராமாயண'த்தைப் படித்த பொழுது, இந்த உணர்வுதான் ஏற்பட்டது.

'உ.பா' வை இன்னும் முழுதாக முடிக்க வில்லை. சில சமயங்களில், எஸ்.இராவின் எழுத்து நடையை அனுபவித்துப் படிக்க வேண்டி, நிறுத்தி நிறுத்திப் படிக்கிறேன். அதனால் கொஞ்சம் தாமதமாகிறது. கள வர்ணனை, கள வர்ணனை என்கிறார்களே...? அதில் தூள் பரத்தியிருக்கிறார்.

மொத்தமாக முடித்து மூட்டை கட்டிவிட்டு, மீண்டும் இதைப் பற்றி எழுத வேண்டும்.
|